கோடை வெயிலில் நான் மட்டும் குளிமையாய் உணர்ந்தேன் அந்த காபி ஷாப்பின் கூரையினுள். நான் இங்கு வருவது இதுவே முதல் முறை. அதுவும் என் நண்பர்களுடன். எனது வாழ்நாளின் விலையுயர்ந்த காபியை குடித்துக்கொண்டிருக்கிறேன். என்னை போன்ற நடுத்தர வர்க்கத்திற்கு இவ்வளவு விலையுயர்ந்த காபி இருக்கிறதா என்று கூட தெரியாது.
அந்த காபி ஷாப்பின் கதவு ஒவ்வொரு முறை திறக்கையிலும் மணி சத்தம் ஒலிக்கும். அப்படி ஒரு முறை திறக்கையில், காபியின் மீது இருந்த என்னுடைய ஆர்வம் காற்றில் கலந்த புகையாய் போனது.
பத்து நாட்களாய் என்னை பாடாய் படுத்தும் ராட்சசி, என் கனவுகளின் நாயகி, என் கனவுக் கோட்டையின் இளவரசி என் "சாரா " வந்திருக்கிறாள். எனக்குள்ளே பூத்த சந்தோசத்தால் வாயில் புன்னகை.
எனக்கு இரு இருக்கைக்கு முன்னால் அமர்ந்தாள். ஒரே நொடியில் அங்கிருந்த அனைவரின் பார்வையையும் ஈர்த்தாள் என் சாரா. ஆனால் பெரும் பாக்கியசாலியான அந்த காபி ஷாப்பின் கதவு மட்டுமே அவளுடைய கவனத்தை ஈர்த்தது. யாருக்காகவோ காத்திருக்கிறாள் என்பது தெரிகிறது. யாருக்காக காத்திருக்கிறாள்? உறவினர்களுக்காகவா? இல்லை நண்பர்களுக்காகவா? ஒரு வேலை காதலனாக இருக்குமோ?? ஐயோ! என் சாரா காதலிக்கிறாளா?? இத்தனை கேள்விகளும் என் மண்டைக்குள் மத்தளம் போட்டுக்கொண்டிருந்தது.
இளம் பெண்களை எளிதில் கவரும் தோற்றம் கொண்ட ஒரு இளைஞன் காபி ஷாப்பின் உள்ளே நுழைந்தான்.
இன்னும் அரை நிமிடத்தில் நின்று விடுவோம் என்று என் இதயம் அறிந்திருக்கவில்லை. ஆம், என் சாரா பெரிய புன்னகையுடன் அவனை வரவேற்று, அமர வைத்தாள். ஒரு வேலை அவன் அவள் காதலனாக இருந்தால், அவளை " என் சாரா " என்று கூப்பிடுவது சரியாக இருக்காது. அவள் எனக்கானவள் இல்லை. என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கண்கள் கலங்கின. இன்னும் இரண்டு நிமிடம் அங்கு இருந்தால், என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியாது. என் நண்பர்களை விரைவாக அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டேன். ஆனால், என்னுள் ஏதோ ஒன்றை விட்டு செல்வது போல் ஒரு தோணல். ஆம். விட்டு செல்கிறேன், என் உடைந்து போன இதயத்தை.
16 ஜூன், 2008
நண்பா,
நான் இன்று உடைந்துவிட்டேன். இதை உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால், அந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை.
என் சாரா எனக்கானவள் இல்லை. என் வாழ்வில் வந்த முதல் பெண் இவள் தான். இந்த பத்தே நாட்களில் இவள் தான் என் வாழ்க்கை என்பது போல் மாற்றிவிட்டாள். இதெல்லாம் முட்டாள் தனமாகத்தான் இருக்கிறது. ஆனால், என்னுள் அவள் எப்படி வந்தாள் என்பது விடை தெரிய புதிராகவே இருக்கிறது.
No comments:
Post a Comment